Tuesday, February 15, 2011

சுமதி வந்திருக்கிறாள் - மாங்கல்யம் தந்துனானே...

சுமதி வந்திருக்கிறாள்...

என் பெண் சுமதி. பாடம் சொல்லி தருவது, மற்றவருக்கு உதவுவது என எல்லாருக்கும் எல்லாமுமாய் இருக்க ஆசைபடுபவள். சிறு வயதில், படிப்பு, ஆட்டம் என்று இருந்தவள் இப்பொழுது, கணவன் கைபிடித்து ஒரு பொறுப்பான குடும்ப தலைவியாய் வலம் வருகிறாள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமதியின் கல்யாணம் ஒரு கனவு போல தோன்றுகிறது. சுமதி, ஒரு நாள் வந்து, நான் கல்யாணம் செய்துகொள்கிறேன், மாப்பிள்ளை பாருங்கள் என்றாள். சுந்தரும் மிக நல்ல பையன். மனைவியை அவ்வளவு அன்பாக பார்த்துகொள்கிறான்.  எல்லாம் அவள் ஆசைப்படி தான் செய்தோம்! ஒரே மகளின் திருமணமும் நன்றாக முடிந்து ஒரு வருடம் ஆக போகிறது. அவளும் சந்தோஷமாக இருக்கிறாள்.

என் பெயர் சுந்தரவடிவு. தமிழ்நாட்டில் இருக்கும் பல லக்ஷம் குடும்ப தலைவிகளில் ஒருத்தி. என்னை சுற்றி சொந்தங்களும், நண்பர்களும் என நிறைந்த வாழ்க்கை.  இப்போது கூட, எங்கள் தெருவே சேர்ந்து தான் சுமதிக்கு தலை தீபாவளி சீர் கொண்டாட்டங்கள் செய்கிறோம்! எல்லோரும் சேர்ந்து செய்யும்போது சந்தோஷம் பல மடங்காகிறது. தெரு குழந்தைகள் பட்டாசு வெடிக்க போடும் ரகளையில் எனக்கு சுமதியும் சுரேஷும் அடித்துகொள்வது ஞாபகத்துக்கு வருகிறது. அவர்கள் இணைபிரியா நண்பர்கள். ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க மாட்டார்கள். ஆனால், ஏதோ நடந்திருக்கிறது. சுமதி வந்த நாளிலிருந்தே சுரேஷை காணோம்! கண்ணிலேயே படவில்லை. சுமதியும் தான் அவனை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஊரில் காய்கறி விற்கும் பாட்டியிலிருந்து பேப்பர் போடும் சண்முகம் வரை விசாரிப்பவள், சுரேஷை பத்தி கேட்காதது ஏதோ செய்தது. தாய் அறியா சூல் இல்லை தான். ஆனாலும், மனதை அரிக்கிறது. சுரேஷ் அம்மா சாரதாவை கேட்டால் அவளும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏனோ முகம் வாடி தெரிகிறாள். என்னவென்று கேட்டால், தலைவலி, கால் வலி என்று சொல்கிறாள். சுரேஷ் அமெரிக்கா செல்லும் கவலையாய் இருக்குமோ? என்னவென்று தெரியலையே, முருகா! எல்லாரையும் இந்த தீபாவளி அன்னைக்கு சந்தோஷ படுத்து!

1 comment:

Aarthi@Paperandme said...

i like this thodar kathai.. aduthu vanthu irukkuma nu nenaithu konde open pannen.. nan yemaravillai..
story nalla poguthu..