Tuesday, March 03, 2009

Rajavum Rosyum

ராஜாவுக்கு சரியான கோபம்... இந்த முருகனுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? இன்றும் இதே வீதியில் தான் வாக்கிங் வர வேண்டுமா? இதில் இவனையும் இழுத்து கொண்டு. "நாம் கூப்பிடற இடத்துக்கு இவன் வரதுக்கு எவ்ளோ கஷ்டபடுவோம்? ஆனா, இவன் இழுத்த இழுப்புகெல்லாம் நம்ம வர வேண்டியதா இருக்கு. நம்ம பொழப்பு நாய் பொழப்புன்றது சரியாதான் இருக்கு. ச்சே!", என்று சலித்து கொண்டான். ராஜாவுக்கு இந்த வீதி பிடிக்காததில் ஒரு காரணம் உண்டு. அந்த மூலை வீட்டில் ரோசி இருப்பாள். அவளுக்கு எப்போதும் முருகனை பிடிக்கும். எதோ அவன் வந்து தான் தன் வாழ்கை நன்றாக போவதாக சீன் போடுவாள். "இதெல்லாம் தேவையா?" என்று ராஜாவுக்கு எரிச்சல் வரும். இது கூட புரியாத மண்டுவாக முருகன் இருக்கானே என்று உள்ளூர ஒரு வருத்தம் கூட.

ஆஹா! மூலை வீட்டை நெருங்கி விட்டோம்! முருகனுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா? இவன என்ன பண்றது? என்று நினைத்த ராஜா திடுகிட்டான். இது வரை முருகனை இவன் அவன் என்று சொன்னதில்லை. அதுக்கும் அவன் மேலேயே கோபம் வந்தது. இந்த முருகனும் தான் ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறான்? "ராஜா, சீக்கிரம் வா!" என்று அதட்டல் வேறு! ராஜாவுக்கு சுறு சுறுவென்று கோபம் வந்தது. அப்படியே கடித்து குதறலாமாவென்று நினைத்தான். ஆனால் என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்து. இந்த ஜென்மத்தில் இந்த பொழப்புக்கு வேற என்ன செய்வது? என்று தன்னை நொந்துகொண்டே முருகனை தொடர்ந்தான். இதோ! ரோசியும் நிற்கிறாள். முருகனை கண்டதும், எதோ காணாததை கண்டது போல அப்படி ஓடி வருகிறாள். ச்சே! இதெல்லாம் பார்க்கணும் நம்ம தலை எழுதிட்டானே! ன்னு பிரம்மா மேலயே ராஜாவுக்கு கோபம் வந்தது.

மூவரும் அருகில் இருந்த பார்க்குக்கு சென்றனர். முருகன் தான் எடுத்து வந்த பிஸ்கட்ஐ ரோசிக்கு தர, அவளும் அதை ஆவலாய் சாப்பிட்டாள். "என்னவோ இவங்க வீட்ல பிஸ்கட்ஏ கண்ல காட்டாதது மாதிரி! அங்க தான் ஏழு கார் நிக்குதே! அப்பறமும் ஏன் இந்த சீன்? ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது!" என்று ராஜா சைடு காப்பில் பொருமினான். ஆனால் முருகன் இதெல்லாம் கண்டால் தானே? ரோசியுடன் நேரம் செலவழிப்பது தான் உலகில் மிக முக்கியமான பணியாக செய்து கொண்டு இருந்தான். ரோசியும் ராஜாவை திரும்பி கூட பார்க்க வில்லை. ஏதோ முருகன் மட்டுமே உலகம் என்று இருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, முருகன் மனமில்லாமல் கிளம்பினான். ரோசி ஏக்க பார்வை பார்த்தாள். "அப்பாடா! இந்த கருமம் இனி இல்ல" என்று குஷியாக இருந்தது ராஜா மட்டுமே. ஆனால் அவனுக்கும் முருகன் முகம் பார்த்து வருத்தம் தான். "ஆனா! அதுக்காக? ரோசிய தலையிலயா வச்சுக்க முடியும்? அவங்க வீட்ல என்ன சொல்வாங்க?" என்று நினைத்து கொண்டே ரோஸிஐ திரும்பி பார்த்தான் ராஜா. அப்போது ரோஸி வேண்டாவெறுப்பாய் வீட்டுக்குள் சென்று கொண்டு இருந்தாள். "என்னடா இது? நாம் நம் வீட்டுக்கு போனால் அம்மா காலையே பிடித்து கொண்டு சுற்றுவோம், அப்பா வந்தால் விளையாடுவோம், அக்கா கொஞ்சாமால் விட மாட்டோம். இவ என்னடானா, வீட்டுக்கு போறதுக்கு இவ்ளோ மூஞ்சிய தூக்கி வச்சுகறாளே? முருகனை அவ்ளோ பிடிச்சி போச்சா?" என்று நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்தான்.

இரவு தூங்க போகும் போது, முருகனும் அம்மாவும் பேசுவது கேட்டது. "என்னடா, இன்னைக்கும் ரோசிய பார்த்துட்டு வந்தியா? உனக்கு இதே பொழப்பா போச்சு. படிப்பு தவிர மத்ததெல்லாம் பண்ற! அப்பாகிட்ட சொல்லணுமா?" என்று அம்மா கேட்கும் குரல். "நல்லா வேணும், முருகா! பிஸ்கட்ஆ குடுக்குற பிஸ்கட். அம்மா கரெக்டா கேட்டீங்கமா!" என்று துள்ளாட்டம் போட்டான் ராஜா(மனதிற்குள் தான்!). கொஞ்சம் கழித்து முருகனின் குரல் கேட்டது. " அம்மா! பாவம்மா ரோஸி! அவ வீட்ல தான் யாருமே பார்த்துகறதில்ல. vet இருக்காரு, instructor இருக்காரு, சமையல் காரம்மா இருக்காங்க. ஆனா, யாருமே அது கிட்ட அன்பா இல்லமா. ஏதோ கடமைக்கு சாதம் போடறாங்க; மத்த காரியம் பண்றாங்க. ரோஸி எவ்ளோ நல்லா வெளையாடுது தெரியுமா? அது பாவம்மா. நாய்னா அன்பு எதிர்பார்க்க கூடாதா? அதுவும் உயிர் தான மா! அதான் நான் போய் டெய்லி கொஞ்சம் வெளையாடிட்டு வரேன். இது தப்பாமா?". "இல்லடா கண்ணா! தப்பே இல்ல" என்று அம்மா அணைத்து கொண்டார்கள். கேட்டு கொண்டிருந்த ராஜாவுக்கு யாரோ மண்டையில் ஓங்கி அடித்தது போல இருந்தது. "ச்சே! ஒரு சக நாயோட கஷ்டம் தெரியாம இருந்துட்டோம்! அதான் ரோஸி சோகமா வீட்டுக்கு போச்சா? இப்ப எல்லாம் புரியுது. இனிமே நம்மளும் ரோசியோட friendlya இருக்கணும்." என்ற முடிவுடன் தூங்க போனான்.

மறுநாள், ரோஸிஐ பார்க்க முருகன் சென்ற போது, ராஜாவும் துள்ளி கொண்டு சென்றான், ரோஸிஐ பார்த்து சிநேக பார்வையுடன்.

- Alpine

No comments: