Thursday, February 17, 2011

சுமதி வந்திருக்கிறாள் - என்னவென்று சொல்வதம்மா..

சுமதி வந்திருக்கிறாள்...

என் தோழியின் பெண் சுமதி. எனக்கும் பெண் போல தான். எனக்கு இப்படி ஒரு மகள்/மருமகள் கிடைக்க வேண்டும் என எல்லோரும் நினைக்கும் ஒரு பெண். என் மகனின் உயிர் தோழி... சில காலம் முன்பு வரை. இந்த தீபாவளியை என்னுடன் கொண்டாடாமல், என் மகன் எங்கோ சுற்றி சுற்றி திரிய காரணமான பெண். அவன் எத்தனைக்கு விலகி போகின்றானோ, அத்தனைக்கு அவனை பற்றி எதுவும் கேட்காத பெண்.

என் பெயர் சாரதா. வீட்டையும், வேலையையும் பார்க்கும் பல்லாயிரகணக்கான தாய்மார்களுள் ஒருத்தி. சுரேஷ் அப்பா இறந்த பிறகு, வீடு, வேலை, இவற்றோடு சுரேஷையும் வளர்க்க நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதற்கெல்லாம் உதவியாய் இருந்தது சுமதியின் பெற்றோரும் மற்ற தெரு மக்களும் தான். இங்கு எல்லோரும் எல்லாருக்கும் உதவி கொள்வோம். எனக்கு வாழ்வில் ஒரே ஆசை, சுரேஷ் நன்றாக இருக்க வேண்டும் என்று. அதற்கு அவன் அமெரிக்கா செல்ல வேண்டும், நிறைய கற்க வேண்டும், பெரிய பதவி வகிக்க வேண்டும். இதற்கு ஆயிரம் பேர் உதவி இருந்தாலும், மிகவும் உதவியது சுமதி தான். சுரேஷ் படிக்க உதவினாள்; சுரேஷுக்கு அமெரிக்க கனவை தன் கனவென்று சொல்லி அவனையும் கனவு காண செய்தாள். இப்பொழுது, அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அமெரிக்கா செல்லவும் போகிறான். இதெல்லாம், சுமதி சுரேஷுக்கு செய்த உதவிகள். ஆனால், இப்பொழுது இருவரும் பேசிகொள்வதே இல்லை. ஒருவரை பற்றி ஒருவர் கேட்பதும் இல்லை. அதற்கு காரணம், சுமதி சுரேஷுக்கு செய்த பெரிய, யாருக்கும் தெரியாத, எனக்கு மட்டும் புரிந்த உதவி. சுமதியும் சுரேஷும் அமெரிக்கா செல்ல போன வருடம் தயார் ஆனார்கள். ஆனால், சுரேஷ் எனக்காக அமெரிக்கா செல்வதை நிறுத்தி விட்டான்.உன்ன யாருமா பார்த்துபாங்கன்னு பையன் கேட்கறது எத்தனை பேருக்கு கிட்டும் சொர்க்கம்? அது எனக்கு கிடைத்தது. நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. சுமதி என்னையும் சுரேஷையும் புரிந்து கொண்டு, சுரேஷிடம் தனக்கு கல்யாணம் நிச்சயமானதால் தான் படிக்க முடியாதென்றும், தன் கனவான அமெரிக்க படிப்பை தனக்காக அவன் நடத்த வேண்டும் என்றும், அதுவே அவளுக்கு அவன் தரும் கல்யாண பரிசென்றும், அவன் வரும் வரை என்னை அவள் பார்த்து கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். சுரேஷ் குதித்தான், கெஞ்சினான், அவளை படிக்க போகுமாறு. ஆனால், சுமதி ஒத்துக்கொள்ளவில்லை. அதில் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இப்பொழுது பேசிக்கொள்வதே இல்லை. என்னிடம், அவள் பெற்றோர் கல்யாணத்திற்கு அவளை force செய்ததாக சுரேஷிடம் சொல்ல சொல்லிவிட்டாள். அப்பொழுது தான் அவன் கோபம் எல்லாம் அமெரிக்கா செல்வதில் திரும்பும் - அவனும் செல்வான், என் கனவும் நிறைவேறும் என்று. இதோ கனவு நிறைவேறும் நாள் நெருங்குகிறது. ஆனால், இந்த தீபாவளி திருநாளில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.  எனக்காக சுமதி தன் படிப்பை தியாகம் செய்ததாகவே தோன்றுகின்றது. அவள் சந்தோஷமாக கணவன், குடும்பம் என இருந்தாலும் படிப்பை விட்டுதந்தாள் என்றே மனம் பாடாய் படுகிறது. சுரேஷுகாக சுமதி வாழ்வை கெடுத்தேனோ என்று தினமும் வருந்துகிறேன். கடவுளே! எனக்கு என்ன பண்ணுவதுனே தெரியலயே.

[அடுத்த பகுதி.... இறுதி பகுதி]

No comments: